குழந்தைகளுக்கானப் படக்கதை - 'வண்டு-சிண்டு கதைகள்'

Friday, March 28, 2008

நிற்க! சிந்திக்க! பின்னூட்டமிடுக! (I mean comments pls.)


நிற்க! வண்டின் பயணம், சற்று இளைப்பாரட்டும் இங்கு. பயணத்தைப் பிறகொரு நாள் பார்க்கலாம்.

என் தாய் தந்தையைப் பற்றிப் பெருமையாய், பேசிய பொழுது (அதாவது, over-ஆய் ice வைத்ததாய், என் உடன்பிறப்பு மின்னஞ்சலிட்டதை, அப்பொழுதே மறந்துவிட்டு), என் கண்ணுக்குள் நின்ற இன்னொரு விஷயம், என் தாய்மொழி.


நான் இப்பொழுது எண்ணி மகிழும் என் இளமைக்காலம்;
என் பெற்றோரோடு, நான் பேசி மகிழும் அந்தப்பொழுதுகள்;
நான் சுற்றித்திரிந்த தெருக்கள்;
என் வாழ்க்கையின் எல்லாக் கனவுகளின் verbal translation;
என் உ.பி. யோடு வெட்டியாய், நான் அடித்த அரட்டை;
எல்லாமே (கொஞ்சமே கொஞ்சம் ஆங்கிலக்கலப்போடு),

தமிழ்! தமிழ்! தமிழ்!

தான். இந்த அறிய கண்டுபிடிப்பிற்கு, எதற்கு ‘நிற்க! சிந்திக்க! பின்னூட்டமிடுக!’ என்கிறீர்களா. வண்டின் profile-ஐ என்றைக்காவது பார்த்த ஞாபகம் இருக்கிறதா?. Location: London, UK.(profile பார்க்கச் செல்பவர்கள், தயவுசெய்து 'Back' button அடித்து இங்கேயே வரவும்).

Yes! Location: London, UK. முழுவதுமாக மாறிப்போன profile; இவ்வலைப்பூவில், கடந்த மூன்று நாட்களாக சுற்றி வந்த வண்டின் இன்றைய நிஜம் --> எங்கு திரும்பினாலும், சுத்தமாகத்தமிழ்க் காற்றே வீசாத, இயற்கை; எந்தக் காகிதம் பிரித்தாலும் சத்தமாகத் தமிழ் பேசாத வாசிப்புகள்;

இது கூடப் புரியாமலா, தாய்த்திருநாட்டில் இருந்து பறந்து வந்தேன் என்று கேட்கிறீர்கள் - புரிகிறது. இந்த, ‘நிற்க! சிந்திக்க!’ எனக்காக இல்லை.

'தமிழ்த் தெரியாத', என் அடுத்த சந்ததிக்காக; அவர்களின் தமிழ் பேசும், தாத்தா பாட்டிக்காக; இந்த வலைப்பூவைத் தமிழில் எழுதி மகிழுந்து, ஒரு நாள் என் பிள்ளையும் இதைப்படிக்கும் என்று, ஒரு சின்ன ஆசையை ஒளித்து வைத்திருக்கும் என் மனதிற்காக.

எனக்காவது, தொலைபேசியில் தமிழர்களோடு தமிழ் பேச முடியும்;
வலைப்பூவில் பாய்ந்து பாய்ந்து பத்திரிக்கை படிக்க முடியும் (நான் படிக்கும் பொழுது பக்கத்தில் இருந்து பார்த்ததில்லையே? - சாமிக்கு ஒரு ரூபாய் முடிந்து வைத்து நன்றி சொல்லுங்கள்);

மின் அஞ்சலில் தமிழர்களோடு தட்டச்ச முடியும்; அவ்வளவு ஏன்? ‘சொந்தமாக ஒரு வலைப்பூ’ எழுதும் அளவுக்குத் தமிழ் எழுதப்படிக்கத் தெரியும்.

ஆனால், இன்னும் தமிழ் படிக்கத் தெரியாத அந்த அடுத்த சந்ததி என்ன செய்யும்.

சுற்றி வளைத்துப்பார்த்தால், இந்த ‘நிற்க! சிந்திக்க!’, என்னைப்போன்ற, தமிழை இன்னும், வீட்டிலேயே, இரண்டாம் பாடமாகப் பிள்ளைகளுக்கு ஆரம்பிக்காத வண்டுகளுக்காகத் தானோ?


அப்படியென்றால், இப்படி வைத்துக்கொள்வோம்.’நிற்க! சிந்திக்க’-வை, என்னைப் போன்றவர்கள் எடுத்துக்கொள்கிறோம்; ‘பின்னூட்டமிடுக’-வை, இந்த விஷயத்தில் பழம் தின்று கொட்டை போட்டவர்கள் எடுத்துக்கொள்ளுங்கள்.

வண்டின் FAQ:

1. வண்டுடன் ‘நி!சி!’-வில் நிற்பவர்கள், என்ன செய்வதாய் உத்தேசம்?. (அட! எங்களுக்கும் சொல்லுங்கப்பா)

2. பெரியவர்கள் அனைவரும் அதாவது இந்தக் கேள்விக்கு, நடைமுறைக்கு ஒத்து வரும்படியான் ஒரு பதிலை, already நடைமுறைப் படுத்திக்கொண்டிருக்கும் நல்லவர்கள், வல்லவர்கள் அனைவரும், என்ன செய்தீர்கள் என்று தயவு செய்து சொல்லவும்.(அட! இதுக்கு மேலக் குனிய முடியலைங்கோ! Keyboard, table-க்குக் கீழ இருந்து தெரியமாட்டேங்குதுங்கோ!)

நன்றி! வணக்கம்! மீண்டும் சந்திப்போம்.

ஒலிக்கும்... ...

Thursday, March 27, 2008

என் சிறகுகள்... ...


‘முயற்சி திருவினையாக்கும்’ என, நான் கற்ற பாடம், 2 ஆண்டுகளில் மறந்து போனது.SSLC-க்குப்பின் 2 ஆண்டுகள் கழித்து +2 பொதுத்தேர்வில், தாராளமாய் ‘pass’ செய்துவிட்டேன். ஆனால், எடுத்த மார்க்குகளில் தான் கஞ்சத்தனம். 1200-க்கு, 1000 கூடத்தாண்டவில்லை.1000-த்தைத் தொட, இருந்த 6 பாடங்கள் போதவில்லை.

அது என் குற்றமுமில்லை.தமிழகத்தின் கல்வித்துறை, ‘பொதுத்தேர்வில் வண்டின் போராட்டங்கள்’ என்று ஒரு 7-ஆம் பாடம் வைத்திருந்தால், ‘வெற்றி எட்டுத்திக்கும் எட்ட’ முரசு கொட்டியிருப்பேன். போகட்டும் விடுங்கள்! அது பழையகதை. (இங்கே, ‘கண்ணீர் விட்டு உருண்டு உருண்டு அழும்’ Emoticon ஒன்று இருப்பதாய்க் கற்பனை செய்து கொள்ளுங்கள்)

ஆனால், நினைத்த கல்லூரியில், நினைத்த இடம் கிடைக்க அது தடையாய் இல்லை. (எது? என் மார்க்குகள் தான்).

-நன்றி! என் ‘மார்க்’-கிற்கு முன்னால் நின்ற என் தந்தையின் முயற்சிக்கு.

நிற்க!

இந்த வண்டின் பயணத்தில், Highlight செய்யும்படியான் Hi-Tech விஷயங்கள் சில உண்டென்றால், அதில் என் தாய் தந்தைக்கு, அதிகப்பங்குண்டு.

20 வருடங்களுக்கு மேலாகப் பெற்றபிள்ளைகளை, கண்ணுக்குள்ளேயே வைத்துக்கொண்டு, ஒரு கடுசொல் கூடக்கூறாத, தாய் தந்தை யாருக்கு உண்டென்று, கை துக்கச்சொல்லுங்கள் – வண்டு, கை, கால் எல்லாம் தூக்கி, எல்லோருக்கும் மேலே பறந்து கொண்டிருக்கும்.

எனக்கு நினைவு தெரிந்து, ஒரே ஒரு முறை, ‘ஜந்து விரலும்’ பதியுமாறு ஜந்தாப்பில் அடிவாங்கியது ஒன்று தான், தந்தையின் தண்டனையாய் நினைவிருக்கிறது. (ஜந்தாப்பில் வண்டின் கல்வி நிலை தெரிந்தவர்கள், இதற்கு வருத்தப்பட மாட்டார்கள்.)

எனக்கு நினைவு தெரிந்து,

‘தம்மால் இயன்றதனைத் தாமியற்றிக் கொள்ளாதார்
வெந்நீரும் ஆடாதார் பாய்பவோ தீ’

என்று, என் சோர்விலா சோம்பேறித்தனத்தைக் கூட, அழகு தமிழில்த் தான், என் தாய் திட்டியதாக, என் நினைவில் இருக்கிறது.

என் தாயின் மாறாத புன்னகையும் என் தந்தையின், கடுமையில்லாத மொழியும், எனக்கும் என் உடன்பிறப்பிற்கும், வானத்தின் எல்லை தாண்டிப்பறப்பதற்குக் கிடைத்த சிறகுகள்.

ஒலிக்கும்... ...

Tuesday, March 25, 2008

வாழ்க்கைத் தண்டவாளத்தின் வானவில் வரைபடங்கள்


**குருகுலத்தின் பெயர் - வீட்டிலிருந்து இரண்டு தெரு தள்ளியிருந்த convent ‘Holy Trinity’.
**படித்தது - ஒண்ணாப்பில் இருந்து ஐந்தாப்பு.
**பிடித்தது - Sylvester master வாசித்த guitar; Srinivas master நடனக்குழுவில்,‘கோபியர் கொஞ்சும் ரமண’-னாய், தேறிய நாள்;ஒவ்வொரு சனிக்கிழமையும், தொடரும் ஞாயிரும்.
**பசுமரத்தாணியாய்ப் பதிந்த பாடங்கள்- அப்படி எதுவும் இருந்ததாய், என் ‘சரித்திர, புவியியல், அறிவியல், கணித’-த்தை, ஞாபகமாய் மறந்த ஞாபகத்தில் சத்தியமாய், எதுவும் இல்லை.

இப்படி, சிங்காரச்சென்னையின், புஷ்பக விமானத்தில் (‘ரிக்ஷா’), RNV-யாய் வலம் வந்த எனக்கு ... ...ஆறாம் வகுப்பில் தான், நான் வசித்த ஆசியாக்கண்டமே, அதிராமல் அதிர்ந்தது. தமிழாசிரியையாய், என் தாய் பணியாற்றிய குருகுலத்தில் எனக்கு இடம் கிடைத்தது.

‘ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக் கேட்ட தாய்.’

எவ்வளவு முயன்றும், இந்தக்குறளை, என் தாய்த்தமிழாசிரியை, என் உடன்பிறப்பு, சக மாணவர்கள், எனக்குப் பாடம் உரைத்த ஆசிரியர்கள் மற்றும் 7-ஆம், 8-ஆம், 9-ஆம்.. .. ..12-ஆம் வகுப்பு அனைத்திற்கும் பாடமளித்த ஆசிரியர்கள்; இவர்கள் யார் மனத்திலிருந்தும், என்னால் அழிக்க முடியவில்லை.

‘விளைவு?’

‘போர், போர், உக்கிரமான போர்
ஒரு நாளல்ல, இரு நாளல்ல
மாபெரும் மகதத்தின் மானம் பறிபோகும் விதத்தில்
சின்னஞ்சிறு கலிங்கம், 120 நாட்கள், போர் நடத்திற்று’

-நன்றி! பள்ளியின் ‘அசோகர்’ நாடகத்தின் முன்னுரை எழுதிய என் தாய்க்கு - 1988

அசோகரின் போரைவிட, இந்த வண்டின் போர்க்களம், மிகக்கொடூரமாய் இருந்தது, 10 ½ வயதில். :(

‘படிக்க வேண்டும், படிக்க வேண்டும், உக்கிரமாய்ப்படிக்க வேண்டும்
ஒரு நாளல்ல; இரு நாளல்ல;
மாபெரும் படிப்புக்குடும்பத்தின் மானம் காக்கும் வகையில்
சின்னஞ்சிறு வண்டு 7 வருடங்கள், போர் நடத்திற்று.’

-நன்றி! பள்ளியின் ‘அசோகர்’ நாடகத்தின் முன்னுரை எழுதிய என் தாய்க்கு - 1988

‘விளைவு?’

5 வருடங்களுக்குப்பின் SSLC பொதுத்தேர்வில், பள்ளியின் top scorer.. .. ..வண்டு.

என் வாழ்க்கைத் தண்டவாளத்தில், வானவில்லில் வரைந்த வரைபடங்கள் சில உண்டென்றால், அதில் இதுவும் ஒன்று;
என் வாழ்க்கைத் தண்டவாளத்தில், வெற்றியூர் செல்ல வாய்ப்புகள் சில வந்ததென்றால், அதற்குக் காரணம், நான் கற்ற முதல் பாடம் - ‘முயற்சி திருவினை ஆக்கும்’

ஒலிக்கும்... ...

Monday, March 24, 2008

பஞ்சுமிட்டாய் வண்டு, RNV....:)


ஒரு அன்னப்பறவைக்கும் ப்ஃனிக்ஸ் பறவைக்கும் பிறந்த வண்டு. இயற்கை - உலகம்; வானம் - வீடு; பிரித்தறிதலும், எழுந்தெழுதலும் - கற்ற பாடம்; வானவில் - வாழ்க்கை;

இது தொடக்கம்;

பின் நடந்தது என்ன?

Its a fairy tale. A dream comes true. மாட மாளிகையும் கூடகோபுரமும் குடி இருந்த, ஒரு ‘கச்சாலீஸ்வரர்’ வசிப்பின், இராஜ வாரிசு.

“மகத வினைஞரும் மராட்டக்கம்மரும்
அவந்திக்கொல்லரும் யவனத்தச்சரும்
கொண்டினிதியற்றிய .. .. “


புஷ்பக விமானமே, ஆசைப்பட்ட, சென்னை ‘ரிக்ஷா’-வின், இளைய பயணி.
மகாராணியார்க்கும், உடன் பிறப்பிற்கும் மரியாதை தந்து, பக்க இருக்கையில், சென்னையை ஊர்வலம் வந்த , பஞ்சுமிட்டாய் வண்டு. :) ‘ரொம்ப நல்ல வண்டு’. (If u would like to follow bee’s journey, always remember what is ‘RNV’ - ரொம்ப நல்ல வண்டு).

இது கனவு.

பின் நடந்தது என்ன?

Well, you need to go for education, right?.

“We know accurately only when we know little,
With knowledge doubt increases. ”

Then you feel like, ‘you know nothing’, which is, were exactly you started. Then why bother to learn. I tried to sell this idea to the king,(ofcourse, my dad), and found that an 3 year old can’t be an good sales executive.

அன்று தொடங்கியது வண்டின் குருகுலம்.

ஒலிக்கும்... ...

ஏன் இந்தப்பதிவு?


வருகைக்கு நன்றி!

உங்கள் வருகையால், நீங்கள் பெற்றது நட்பு; கொடுத்தது 'என் புன்னகை'.......

நான் பிறந்த காரணத்தை, நானே அறியும் முன், எனை அறிந்த, என் தாய் தந்தை எனக்கெழுதிய, என் முதல் பதிவு :

"காலத்திற்கேற்ற ஒரு கல்வியைக் கற்க சிந்தித்தேன். சிந்தனையில் பூத்தது கணினி. காரணம் என்னை இவ்வுலகிற்குத் தந்த தந்தையின் ஆற்றல் என் சிந்தனையில் உதித்ததால். மூச்சு விட நேரமின்றி முடிந்ததெல்லாம் செய்து பார்க்கும் முனைப்பான ஆற்றலை நானும் என் உடன் பறக்கும் வண்டும் சிந்தித்து சிந்தித்துப் பேசியதுண்டு. அதனால் வந்தது காலத்தின் கணினிக்கலை. அதில் என் கருத்தை விரிக்க மனக்கலை துணிந்தது."

Sunday, March 23, 2008

தாய் தந்த அறிமுகம்


நான் புதுவண்டு !

என் எண்ணங்களை வெளிப்படுத்துவதற்கு எனக்கு சிறகுகள் வேண்டும்.;அச்சிறகுகள் பறப்பதற்கு என் சிந்தனை தூண்டு கோலாகும்.


பறக்கும் இந்த வண்டு தமிழ் மொழிக்குள்ளும் தமிழ் உணர்வுக்குள்ளும் சிறகடிக்க வேண்டும். என் சீரிய சிந்தனை வண்டின் ரீங்காரமாய் இங்கு ஒலிக்கும். தமிழ் மலருக்குள் நான் பறப்பேன். இந்தத் தமிழ்ப் பறவையை வாழ்த்துங்களேன்.

blogger templates 3 columns | Make Money Online