ஒரு பனிக்கால இரவில்...
நீ ஊரில் இல்லாமல்
வாழ்க்கை ஒன்றும் நின்று விடவில்லை!
அலுவலகமும் நானும் கடமையாய்
இயங்கிக் கொண்டே தான் இருக்கின்றோம்!
நண்பர்களும் நானும் நட்பாய்
அளவளாவிக் கொண்டே தான் இருக்கின்றோம்!
இரயில்த்தோழிகளும் நானும் ‘நலமா?’
விசாரித்துக் கொண்டே தான் இருக்கின்றோம்!
பிள்ளையும் நானும் ருசியாய்
சமைத்துக் கொண்டே தான் இருக்கின்றோம்!
நானும் நானும் அன்பாய்
சுவாசித்துக் கொண்டே தான் இருக்கின்றோம்!
நானும் நானும் காதலாய்
வாழ்ந்து கொண்டே தான் இருக்கின்றோம்!
ஒரு பனிக்கால இரவில்
பேருந்து நிலையத்தில் உன் முகம் பார்க்கும் வரை!
என் மூச்சுக்குழல்களின் சிரமங்கள் சீரான வரை!
என் கண்களின் காட்சிகளில் நீ நிறையும் வரை!
என் தூக்கத்தின் நிம்மதியாய் நீ வந்த வரை!
நானும் நானுமாய் என்னை உணர்ந்த வரை!
நீ ஊருக்கு வந்தபின் தான்
வாழ்க்கை, மேற்கொண்டு நகரத் தொடங்குகிறது.
------------------------------------------------------------------------------------------------
நந்து, நந்துன்னு ஒரு நல்லவர் இருக்கார். ‘நிலா’-வ ரொம்ப நல்லாப் படம் பிடிப்பார். அவரோட இந்தப் பதிவுல
http://nandhu1.blogspot.com/2008/07/july-photo-condest-night-light-pit.html
பின்னூட்டம் படிச்சீங்கன்னா, அதுதான், படத்தின் பெயரை தொடர்புப் படுத்தும் வசனம்.முடிஞ்சாப் படிச்சுட்டு வாங்க.:-)
இப்படியெல்லாம் உசுப்பேத்தி உசுப்பேத்தி தான் உடம்பு ரணமாப் போச்சு.என்னமோ, டீச்சர் சொல்ற மாதிரி, ஒரு ‘இருத்தலின் அடையாளமாய்’ இந்த மாதமும் PIT- காரவுகளை இம்சிக்கத் தயாராயிட்டேன் :)
படம் சில நாட்களுக்கு முன்பு எடுத்தது.புதிதாய் முயற்சித்தது, எதுவும் தோதாய் அமையவில்லை. அதனால், படம் பழசு, கவிதை புதுசு. :)
உசுப்பேற்றிய நந்துவுக்கும், ராமலட்சுமிக்கும் , தனி மடலில் அக்கறையாய், ‘இன்னும் இரண்டு நாள் இருக்கு’ என்று உற்சாகப்படுத்திய ராமலட்சுமிக்கும் (அவங்களே தாங்க இவங்களும்) என் வெரி டச்சி டாங்ஸூ! டாங்ஸூ! டாங்ஸூ!
வணக்கம்.
டிஸ்கி.:இந்தக் கவிதையாலும் படத்தாலும் யாருக்கும் யாதேனும் (எதிர்மறையான) பாதிப்பு ஏற்பட்டால், ‘ந’ , ‘ர’ என்ற இரு நல்லவர்கள், முழுப்பொறுப்பையும் ஏற்பார்கள். :D :D.

