
வெள்ளிப்பனி மலையின் மீதுலாவுவோம்
அடிமேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம்
பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம்
எங்கள் பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்!
எங்கள் பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்!
அழுத்தம் திருத்தமாய், தெளிவான உச்சரிப்பு வேண்டுமென்று, இரண்டு வீடுகள் கேட்டும் வரை, சிறுவயதில் ஓங்கிப் பேசியது இன்னும் நினைவில் இருக்கிறது.எல்லாப் பேச்சுப்போட்டிகளுக்கும் முன்னால் நின்று பெயர் கொடுத்துவிடுவேன்.எழுதிக் கொடுக்கத்தான் அம்மா இருக்கிறார்களே.:)
5 நிமிடம் பேச வேண்டுமானால் 5 பக்கங்கள் வேண்டும்;முன்னுரை மேற்கோளோடு தொடங்கினால் கேட்பவரை நிமிர்ந்து உட்கார வைக்கலாம்;கணீரென்று பேச வேண்டும், திருத்தமாகப் பேச வேண்டும்;இது தமிழுக்கு அழகு.
எனவே, மறுதலிக்காத சொற்கள், எளிய உச்சரிப்பு, சலனமிலா நீரோடை போன்ற நடை, தலைப்பை விட்டு விலகாத கருத்து -இப்படி இருக்க வேண்டும், 5 பக்கங்களும்.அம்மா ஒரே மூச்சில் எழுதி முடித்துவிடுவார்,கருத்தை.மற்றதை, நான்கைந்து முறை சண்டை போட்டு, இருவருமாகக் கொண்டு வந்துவிடுவோம்.
இப்பொழுது நினைத்தாலும் இனிமையாக இருக்கிறது. அம்மா சொல்லுவார், ‘நிழலின் அருமை வெயிலில்; நட்பின் அருமை பிரிவில்’. இப்பொழுது இல்லை எனும் பொழுது அதிகமாக ஆசைப் படுகிறது மனம்.
இது நான் முன்னர் எழுதிய, ‘நிற்க! சிந்திக்க! பின்னூட்டமிடுக’ என்ற பதிவின் இரண்டாம் பகுதி.அந்தப் பகுதி படிக்காதவர்கள்,
இங்கே செல்லவும். படித்ததும் 'back' செய்து, இங்கேயே வரவும் :).
இன்று என்னைப் போன்று,இந்தியாவை விட்டு, தமிழ்ப் பேசா நாட்டிற்கு வந்துவிட்ட அல்லது தமிழ்நாட்டை விட்டு தமிழ் இல்லா ஊருக்கு மாற்றலாகிவிட்ட, ‘தமிழ் பேசத் தெரியாத இரண்டாம் தலைமுறை’ உடையவர்கள், என்ன செய்யலாம்? என்பதே அந்த முதல் பதிவின் கேள்வி.
இரண்டாம் தலைமுறையின் நடைமுறைக்கும் நமக்கும் ஒத்துவரும்படியான ‘தமிழ் கற்கும்’ வழிகள் என்ன? என்று வலயுலகில் தேடிய பொழுது, திரு.வி.சுப்பரமணியம் என்பவர், தன்னுடைய இந்தப் பதிவில்
http://www.geocities.com/tamilclassnj/tips.html, அவ்வழிகள் சிலவற்றை அட்டவணையிட்டுருந்தார்.அவர் அனுமதியுடன் அதன் சாராம்சத்தை என் நடையில் இங்கு அளிக்கிறேன்.
முதல் காரணம்: வீட்டில், பெற்றோர் தமிழ் பேசுவதில்லை. ஏன்:
ஏன் 1: தாய் தந்தை இருவரில் ஒருவருக்குத் தமிழ் தெரியாமல் இருக்கலாம்
ஏன் 2: அல்லது தாய் தந்தை இருவருமே தங்கள் பள்ளிப் பருவத்தில் தமிழ் கற்காமல் இருக்கலாம்
ஏன் 3: அல்லது தாய் தந்தை இருவருமே, பல ஆண்டுகளாகத் தமிழ்ப் பேசா ஊரிலேயே வசிப்பதால், ஆங்கிலம் அல்லது அந்த ஊரின் மொழிக்கே அவர்களும் மாறி இருக்கலாம்.
இதற்கு என்ன செய்யலாம்?
தாய் தந்தை இருவரில் ஒருவருக்குத் தமிழ் தெரியவில்லை என்றாலும் இருவருக்குமே தமிழ் பழக்கம் இல்லை என்றாலும், நீங்கள் உங்கள் உறவினரோடும் தமிழ் அறிந்த நண்பர்களோடும் தமிழிலேயேப் பேசுங்கள்.பிள்ளைகளை,அவர்களுடன் தமிழில் பேசுமாறு உற்சாகப்படுத்துங்கள்.நீங்கள் தான் உங்கள் குழந்தைகளுக்கு எடுத்துக்காட்டு.உங்களைப் பார்த்து அவர்களும் உங்களுடன் போட்டியிடத் தயாராவார்கள்.
வீட்டில் யார், தமிழ் சரளமாகப் பேசுகிறார்களோ அவர்களுக்குப் பரிசு என்று சொல்லுங்கள்.அண்ணாவுக்கு ஒரு ஸ்டிக்கர், அப்பாவுக்கு ஒரு ஸ்டிக்கர்,கடைக்குட்டிக்கு ஒரு ஸ்டிக்கர் என்று கொடுங்கள்.10 ஸ்டிக்கருக்குப்பின் ஒரு பரிசு உண்டென்று சொல்லுங்கள்.தமிழ் கற்கும் ஆர்வம் அதிகமாகும்.
பெற்றோர் முதலில் இதைச்செய்ய வேண்டும். உங்கள் பிள்ளைகளோடு வீட்டில் தமிலேயேப் பேசுங்கள், தமிழ் அறிந்த நண்பர்கள், உறவினர் அனைவரிடமும் நீங்களும் தமிழிலேயேப் பேசுங்கள்.பிள்ளைகளுடன் நீங்களும் அ-னா,ஆ-வன்னா படியுங்கள். :).
விளையாட்டு நேரம் போல் , ‘தமிழ் நேரம்’ வையுங்கள். இடையிடே தமிழில் (நல்ல) சினிமாப் பாடல்கள் போட்டுவிடுங்கள்.முதலில் ஆட ஆரம்பிப்பார்கள், பிறகு அர்த்தம் கேட்பார்கள், பிறகு, தானே பாடுவார்கள்.
தமிழ் படிக்கத் தெரியாத தாய் தந்தையரால் நிச்சயமாக இந்தப் பதிவை படிக்க இயலாது :). படிக்கும் நீங்கள் இதை அவர்களுக்குப் படித்துச் சொல்லுங்கள். இல்லை என்றால் திரு.சுப்பிரமணியன் அவர்களின் வலைச்சுட்டியை அவர்களுக்குக் கொடுங்கள்.காரணம் இரண்டு:பெற்றோர் தமிழ் பேச விரும்புவதில்லை. ஏன்:
பிள்ளைகள், வேறு நாடுகளிலெயே அல்லது இந்தியாவின் வேறு மாநிலங்களிலெயே வாழப்போவதால் தமிழ் அவசியமில்லை என நினைத்து சில பெற்றோரே , தமிழைப் பிள்ளைகளுக்கு வேண்டாம் என்று சொல்லுகின்றனர்.
இதற்கு என்ன செய்யலாம்?
இது முற்றிலும் தவறு. பெற்றோராகிய நாம், மொழியை மறந்தாலும் நம் பழக்க வழக்கம், உணவு முறை, மதம்(நம்பிக்கை இருந்தால்:)), நம் உடை, நம் மணவாழ்க்கை முறை இதை எதையும் மறப்பதில்லை.
நம் தாய்மொழி வேண்டாம் என்று நாம் ஆரம்பிக்கும் ஒரு வழக்கம், வளர்ந்து விட்ட நமக்கு, எந்த ஒரு பெரிய பாதிப்பையும் ஏற்படுத்தாமல் இருக்கலாம்.
ஆனால் அது வளரும் பிள்ளைகளைக் குழப்பும். வெளி ஆட்களின் நடுவே வளரும் அவர்களின், ‘தனித்தன்மை’யைக் கேள்விக்குறி ஆக்கும். நம் கலாச்சாரத்தில், இதை எடுத்துக்கொள் அதை விட்டுவிடு என்றால் அவர்களின் குழப்பம் இன்னும் அதிகமாகும். அவர்களுக்கு, அவர்கள் வாழும் நாட்டின், மாநிலத்தின், மக்கள் மட்டும் நண்பர்கள் அல்லவே.தமிழ் பேசும் குடும்பங்களும்,அந்தக் குடும்பங்களில் உள்ள , உங்கள் பிள்ளைகளின் வயதை ஒத்த பிள்ளைகளும் கூட நண்பர்கள் தானே.இவர்களுக்குத் தமிழ் தெரியவில்லை என்றால், தமிழ் நண்பர்களோடு எப்படிப் பேசுவார்கள். முதலில் எப்படித் தமிழ் நண்பர்களை ஏற்படுத்திக் கொள்வார்கள்.தங்கள் காலாச்சாரக் குழப்பங்களைத் தங்கள் வயதொத்தவர்கள் அனைவரும் எப்படிக் கையாள்கிறார்கள் என்று தமிழ் அறியாமலேயே எப்படி அறிவார்கள்.
நீங்கள் வாழும் இடத்தில் உங்கள் பிள்ளைகளுக்கு ஒரு வழிகாட்டல் உருவாக்க மிக அடிப்படைத் தேவை தாய்மொழி அவசியம் என்ற உணரல்.
அதை மிக எளிய முறையில் எப்படிச் செய்வது என்பது அடுத்த வாரம்,அடுத்த பதிவில். நம் சக வலைகளாகிய குட்டீஸ் கார்னரிலும், பேரண்ட்ஸ் கிளப்பிலும் கொஞ்சம் பேசிவிட்டு வருகிறேன்... ...:).(இன்னும் அவர்களுக்கே, சொல்லவில்லை , பேச வருகிறேன் என்று :p). அதுவரை,
இதைக்கேளுங்கள்..
தொடரும்... ...
பி.கு.: இதைச் செய்து பார்க்கலாமே என்ற எண்ணத்தின் விளைவு தான் இந்தப் பதிவு.இதைத் தான், செய்ய வேண்டும் என்று சொல்லவில்லை. :).பிடித்திருந்தாலும், வேறு ஆலோசனைகள் இருந்தாலும் பின்னூட்டமிடுங்கள்.:-)