குழந்தைகளுக்கானப் படக்கதை - 'வண்டு-சிண்டு கதைகள்'

Friday, April 25, 2008

நி.சி.பி. - பாகம் II. தமிழ் அறிய என்ன செய்யலாம்? நடைமுறைக்கு ஒத்துவருபவை எவை?


வெள்ளிப்பனி மலையின் மீதுலாவுவோம்
அடிமேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம்
பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம்
எங்கள் பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்!
எங்கள் பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்!

அழுத்தம் திருத்தமாய், தெளிவான உச்சரிப்பு வேண்டுமென்று, இரண்டு வீடுகள் கேட்டும் வரை, சிறுவயதில் ஓங்கிப் பேசியது இன்னும் நினைவில் இருக்கிறது.எல்லாப் பேச்சுப்போட்டிகளுக்கும் முன்னால் நின்று பெயர் கொடுத்துவிடுவேன்.எழுதிக் கொடுக்கத்தான் அம்மா இருக்கிறார்களே.:)

5 நிமிடம் பேச வேண்டுமானால் 5 பக்கங்கள் வேண்டும்;முன்னுரை மேற்கோளோடு தொடங்கினால் கேட்பவரை நிமிர்ந்து உட்கார வைக்கலாம்;கணீரென்று பேச வேண்டும், திருத்தமாகப் பேச வேண்டும்;இது தமிழுக்கு அழகு.

எனவே, மறுதலிக்காத சொற்கள், எளிய உச்சரிப்பு, சலனமிலா நீரோடை போன்ற நடை, தலைப்பை விட்டு விலகாத கருத்து -இப்படி இருக்க வேண்டும், 5 பக்கங்களும்.அம்மா ஒரே மூச்சில் எழுதி முடித்துவிடுவார்,கருத்தை.மற்றதை, நான்கைந்து முறை சண்டை போட்டு, இருவருமாகக் கொண்டு வந்துவிடுவோம்.

இப்பொழுது நினைத்தாலும் இனிமையாக இருக்கிறது. அம்மா சொல்லுவார், ‘நிழலின் அருமை வெயிலில்; நட்பின் அருமை பிரிவில்’. இப்பொழுது இல்லை எனும் பொழுது அதிகமாக ஆசைப் படுகிறது மனம்.

இது நான் முன்னர் எழுதிய, ‘நிற்க! சிந்திக்க! பின்னூட்டமிடுக’ என்ற பதிவின் இரண்டாம் பகுதி.அந்தப் பகுதி படிக்காதவர்கள், இங்கே செல்லவும். படித்ததும் 'back' செய்து, இங்கேயே வரவும் :).

இன்று என்னைப் போன்று,இந்தியாவை விட்டு, தமிழ்ப் பேசா நாட்டிற்கு வந்துவிட்ட அல்லது தமிழ்நாட்டை விட்டு தமிழ் இல்லா ஊருக்கு மாற்றலாகிவிட்ட, ‘தமிழ் பேசத் தெரியாத இரண்டாம் தலைமுறை’ உடையவர்கள், என்ன செய்யலாம்? என்பதே அந்த முதல் பதிவின் கேள்வி.

இரண்டாம் தலைமுறையின் நடைமுறைக்கும் நமக்கும் ஒத்துவரும்படியான ‘தமிழ் கற்கும்’ வழிகள் என்ன? என்று வலயுலகில் தேடிய பொழுது, திரு.வி.சுப்பரமணியம் என்பவர், தன்னுடைய இந்தப் பதிவில் http://www.geocities.com/tamilclassnj/tips.html, அவ்வழிகள் சிலவற்றை அட்டவணையிட்டுருந்தார்.அவர் அனுமதியுடன் அதன் சாராம்சத்தை என் நடையில் இங்கு அளிக்கிறேன்.

முதல் காரணம்: வீட்டில், பெற்றோர் தமிழ் பேசுவதில்லை.

ஏன்:

ஏன் 1: தாய் தந்தை இருவரில் ஒருவருக்குத் தமிழ் தெரியாமல் இருக்கலாம்

ஏன் 2: அல்லது தாய் தந்தை இருவருமே தங்கள் பள்ளிப் பருவத்தில் தமிழ் கற்காமல் இருக்கலாம்

ஏன் 3: அல்லது தாய் தந்தை இருவருமே, பல ஆண்டுகளாகத் தமிழ்ப் பேசா ஊரிலேயே வசிப்பதால், ஆங்கிலம் அல்லது அந்த ஊரின் மொழிக்கே அவர்களும் மாறி இருக்கலாம்.

இதற்கு என்ன செய்யலாம்?

தாய் தந்தை இருவரில் ஒருவருக்குத் தமிழ் தெரியவில்லை என்றாலும் இருவருக்குமே தமிழ் பழக்கம் இல்லை என்றாலும், நீங்கள் உங்கள் உறவினரோடும் தமிழ் அறிந்த நண்பர்களோடும் தமிழிலேயேப் பேசுங்கள்.பிள்ளைகளை,அவர்களுடன் தமிழில் பேசுமாறு உற்சாகப்படுத்துங்கள்.நீங்கள் தான் உங்கள் குழந்தைகளுக்கு எடுத்துக்காட்டு.உங்களைப் பார்த்து அவர்களும் உங்களுடன் போட்டியிடத் தயாராவார்கள்.

வீட்டில் யார், தமிழ் சரளமாகப் பேசுகிறார்களோ அவர்களுக்குப் பரிசு என்று சொல்லுங்கள்.அண்ணாவுக்கு ஒரு ஸ்டிக்கர், அப்பாவுக்கு ஒரு ஸ்டிக்கர்,கடைக்குட்டிக்கு ஒரு ஸ்டிக்கர் என்று கொடுங்கள்.10 ஸ்டிக்கருக்குப்பின் ஒரு பரிசு உண்டென்று சொல்லுங்கள்.தமிழ் கற்கும் ஆர்வம் அதிகமாகும்.

பெற்றோர் முதலில் இதைச்செய்ய வேண்டும். உங்கள் பிள்ளைகளோடு வீட்டில் தமிலேயேப் பேசுங்கள், தமிழ் அறிந்த நண்பர்கள், உறவினர் அனைவரிடமும் நீங்களும் தமிழிலேயேப் பேசுங்கள்.பிள்ளைகளுடன் நீங்களும் அ-னா,ஆ-வன்னா படியுங்கள். :).

விளையாட்டு நேரம் போல் , ‘தமிழ் நேரம்’ வையுங்கள். இடையிடே தமிழில் (நல்ல) சினிமாப் பாடல்கள் போட்டுவிடுங்கள்.முதலில் ஆட ஆரம்பிப்பார்கள், பிறகு அர்த்தம் கேட்பார்கள், பிறகு, தானே பாடுவார்கள்.

தமிழ் படிக்கத் தெரியாத தாய் தந்தையரால் நிச்சயமாக இந்தப் பதிவை படிக்க இயலாது :). படிக்கும் நீங்கள் இதை அவர்களுக்குப் படித்துச் சொல்லுங்கள். இல்லை என்றால் திரு.சுப்பிரமணியன் அவர்களின் வலைச்சுட்டியை அவர்களுக்குக் கொடுங்கள்.

காரணம் இரண்டு:பெற்றோர் தமிழ் பேச விரும்புவதில்லை.

ஏன்:

பிள்ளைகள், வேறு நாடுகளிலெயே அல்லது இந்தியாவின் வேறு மாநிலங்களிலெயே வாழப்போவதால் தமிழ் அவசியமில்லை என நினைத்து சில பெற்றோரே , தமிழைப் பிள்ளைகளுக்கு வேண்டாம் என்று சொல்லுகின்றனர்.

இதற்கு என்ன செய்யலாம்?

இது முற்றிலும் தவறு. பெற்றோராகிய நாம், மொழியை மறந்தாலும் நம் பழக்க வழக்கம், உணவு முறை, மதம்(நம்பிக்கை இருந்தால்:)), நம் உடை, நம் மணவாழ்க்கை முறை இதை எதையும் மறப்பதில்லை.

நம் தாய்மொழி வேண்டாம் என்று நாம் ஆரம்பிக்கும் ஒரு வழக்கம், வளர்ந்து விட்ட நமக்கு, எந்த ஒரு பெரிய பாதிப்பையும் ஏற்படுத்தாமல் இருக்கலாம்.

ஆனால் அது வளரும் பிள்ளைகளைக் குழப்பும். வெளி ஆட்களின் நடுவே வளரும் அவர்களின், ‘தனித்தன்மை’யைக் கேள்விக்குறி ஆக்கும். நம் கலாச்சாரத்தில், இதை எடுத்துக்கொள் அதை விட்டுவிடு என்றால் அவர்களின் குழப்பம் இன்னும் அதிகமாகும். அவர்களுக்கு, அவர்கள் வாழும் நாட்டின், மாநிலத்தின், மக்கள் மட்டும் நண்பர்கள் அல்லவே.தமிழ் பேசும் குடும்பங்களும்,அந்தக் குடும்பங்களில் உள்ள , உங்கள் பிள்ளைகளின் வயதை ஒத்த பிள்ளைகளும் கூட நண்பர்கள் தானே.இவர்களுக்குத் தமிழ் தெரியவில்லை என்றால், தமிழ் நண்பர்களோடு எப்படிப் பேசுவார்கள். முதலில் எப்படித் தமிழ் நண்பர்களை ஏற்படுத்திக் கொள்வார்கள்.தங்கள் காலாச்சாரக் குழப்பங்களைத் தங்கள் வயதொத்தவர்கள் அனைவரும் எப்படிக் கையாள்கிறார்கள் என்று தமிழ் அறியாமலேயே எப்படி அறிவார்கள்.

நீங்கள் வாழும் இடத்தில் உங்கள் பிள்ளைகளுக்கு ஒரு வழிகாட்டல் உருவாக்க மிக அடிப்படைத் தேவை தாய்மொழி அவசியம் என்ற உணரல்.

அதை மிக எளிய முறையில் எப்படிச் செய்வது என்பது அடுத்த வாரம்,அடுத்த பதிவில். நம் சக வலைகளாகிய குட்டீஸ் கார்னரிலும், பேரண்ட்ஸ் கிளப்பிலும் கொஞ்சம் பேசிவிட்டு வருகிறேன்... ...:).(இன்னும் அவர்களுக்கே, சொல்லவில்லை , பேச வருகிறேன் என்று :p). அதுவரை, இதைக்கேளுங்கள்..

தொடரும்... ...

பி.கு.: இதைச் செய்து பார்க்கலாமே என்ற எண்ணத்தின் விளைவு தான் இந்தப் பதிவு.இதைத் தான், செய்ய வேண்டும் என்று சொல்லவில்லை. :).பிடித்திருந்தாலும், வேறு ஆலோசனைகள் இருந்தாலும் பின்னூட்டமிடுங்கள்.:-)

8 Comments:

cheena (சீனா) said...

I have NO tamil font at present. I have read this useful article. I wd post my comment once i reach home. I am now at CHENNAI OFFICE

cheena (சீனா) said...

புது வண்டே !! - உனது ஆதங்கம் புரிகிறது. என்ன செய்வது. அடுத்த சந்ததி விடுமுறைக்கு 2/3 மாதங்கள் (முடியுமா ?) தாய் நாடு வரும் பொழுது உறவு மற்றும் நட்பு வட்டத்தில் தடுமாறுகிறார்கள். மூத்த தலைமுறையினருடன் பழகுவதில் தயக்கம் இருக்கிறது. பொது மொழி இல்லாத காரணத்தால் எதற்கெடுத்தாலும் உணர்ச்சியற்ற மொழி பெயர்ப்பு - சைகைகள் - ம்ம்ம்ம்ம்

ஒரே வழி - தாய் தாந்தையரில் ஒருவர் தமிழ் தெரிந்தவராக இருந்தால் கூட போதும். ஒரு 3/4 வயது வரை இரு மொழியில் பேசி குழந்தையை குழப்பாமல், அதற்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தமிழ்ப் பாடல்கள் - தமிழ்ப் பேச்சு - தமிழ்ச் சொற்கள் - தமிழ் தமிழ் என அறிமுகப் படுத்தலாம். தாய் தமிழ் தெரிந்தவராக இருப்பின் மிக நன்று. தந்தையும் தமிழரென்றால் குழப்பமே இல்லை. தாயும் தந்தையும் வீட்டில் தமிழிலேயே ஆம் தமிழிலேயே பேச வேண்டும். வா - போ - நட - சட்டை - சாப்பாடு - இட்டலி - தோசை - சப்பாத்தி - நான் - குழம்பு - கூட்டு - தண்ணீர் - எனச் சொல்வதும் (எழுதப் படிக்கத் தெரிவது பின்னால் பார்க்கலாம் ) - முதலில் பேச்சுத்தமிழ் கற்றுக் கொடுக்கலாம்.

காலை எழுந்தவுடன் இறை வணக்கம்- இரவு இறை வணக்கம் சிறு சிறு பாடல்கள் ( பொருள் புரிய வேண்டுமென்பதில்லை) மூலம் தமிழ்க் கடவுள்களை அறிமுகப் படுத்தலாம்.
வீட்டில் குழந்தைகளோடு பேசும் போது தமிழிலேயே பேசலாம்.

என்ன இது பின்னூட்டமா அல்லது மற்றொரு பதிவா ? நிறுத்துகிறேன்.
பிறகு விரிவாக நானே ஒரு பதிவு போடுகிறேன்.

வண்டே கலங்க வேண்டாம்- தமிழ்ப் பிள்ளைகள் தாயின் மூலமாகத்தான் தமிழ் கற்க முடியும். தந்தைக்கு நேரமிருக்காது - பொறுமை இருக்காது. கடமையை வண்டு செய்ய வேண்டும்.

நல் வாழ்த்துகள்

செல்விஷங்கர் said...

புது வண்டே !!

முதலில் சிறு சிறு சொற்களைப் பெசப் பழக்குதல் வேண்டும். பின்னர் பார்க்கும் பொருட்களை தமிழில் கற்றுக் கொடுக்க வேண்டும். ஆனால் ஒரு மொழியில், ஒரே மொழியில், தன் கருத்தை நன்றாகப் பேசக் கற்ற பின்னர் - இதனை நாம் பயன் படுத்தினால் நன்று. இரு மொழிக் குழப்பம் சிறு வயதில் சரியாக இராது.

NewBee said...

அன்பு சீனா ஸார்,

நலமா?.

வருகைக்கும் பொருமைக்கும் நன்றி.:-). மிக்க மகிழ்ச்சி.:)

//ஆம் தமிழிலேயே பேச வேண்டும். வா - போ - நட - சட்டை - சாப்பாடு - இட்டலி - தோசை - சப்பாத்தி - நான் - குழம்பு - கூட்டு - தண்ணீர் - எனச் சொல்வதும் (எழுதப் படிக்கத் தெரிவது பின்னால் பார்க்கலாம் ) - முதலில் பேச்சுத்தமிழ் கற்றுக் கொடுக்கலாம்.
//

இது, நிச்சயமாக, சாத்தியம்.சின்னச் சின்ன சொற்கள் எளிமையாகவும் இருக்கும்,ஆர்வத்தையும் கூட்டும்.

//தமிழ்ப் பிள்ளைகள் தாயின் மூலமாகத்தான் தமிழ் கற்க முடியும். தந்தைக்கு நேரமிருக்காது - பொறுமை இருக்காது.//

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்....இது அஃமார்க் உண்மை.;-).

NewBee said...

அன்பு செல்வி அம்மா,

நலமா?. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அம்மா.:-)

//ஒரே மொழியில், தன் கருத்தை நன்றாகப் பேசக் கற்ற பின்னர் - இதனை நாம் பயன் படுத்தினால் நன்று. இரு மொழிக் குழப்பம் சிறு வயதில் சரியாக இராது//

இதுவும் உண்மை.இரு மொழிக்குழப்பம் சில பிள்ளைகளைப் படுத்தும் தான். 31/2 (அ) 4 வயதில் இரண்டாவது மொழியை ஆரம்பிக்கலாம்.அது வரை தமிழ் பாடல்களை கேட்க வைக்கலாம்.பாடுவதற்காகவாவது ஆர்வமாகக் கற்பார்கள்.

சிவசுப்பிரமணியன் said...

தலைமுறை இடைவெளி மட்டுமல்ல... வெளிநாட்டில் வாழ்வது மட்டுமல்ல... இன்றைய பெற்றொர் தம் பிள்ளைகள் ஆங்கிலத்தில் பேசினால் தான் பெருமை என்ற எண்ணம் ஓங்கி விட்டது... அரசு மனது வைத்தால் இதை ஓரளவு சரி செய்யலாம்

NewBee said...

வாங்க சிவா,

நீங்கள் சொல்வது ஒரு வகையில் உண்மை.தமிழ்நாட்டில் இருக்கும் பொழுது,ஆங்கிலம் பழக முயல்கிறோம்.வெளியில் வந்த பிறகு, தமிழ், தேட முயல்கிறோம்.

நிழலின் அருமை வெயிலில்;நட்பின் அருமை பிரிவில்.:-).

முயற்சி திருவினை ஆகும் சிவா.

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

ராமலக்ஷ்மி said...

கடுவெளியில்-
தமிழ் மேல் உள்ள பற்றினால்-
தமிழ் பற்றி-
ஆயில்யன் கேட்ட
ஆயிரம் கேள்விகளின் பின்னூட்டத்தில்-
சீனா சார் சுட்டிய வழியில் வந்தேன்.

வேறு மாநிலத்தில் வசிக்கும் எனக்கும் இதே பிரச்சனை. என் மகன் பள்ளியில் பாடமாக தமிழைக் கற்க இயலவில்லை. வீட்டில் எப்போதும் தமிழ்தான். நன்றாகவே பேசுகிறான். வாசிக்கவும் வந்தது. வீட்டிலேயே சொல்லிக் கொடுத்திருந்தேன். அ, ஆ அரிச்சுவடியில் ஆரம்பித்து தமிழ் காமிக்ஸ், பிறகு விகடன் குமுதத்தில் வரும் ஜோக்குகள் ,தலைப்புகளை வாசிக்க வைத்து என வளர்த்த தமிழ் கடந்த 4 வருடங்களாக படிப்புச் சுமையில் குறைந்து போயிற்று. இப்போது (12-ஆம் வகுப்பு). எழுத்துக் கூட்டிப் படிக்கிறான் என்றாலும் தாங்கள் பாகம் 1-ல்
//இந்த வலைப்பூவைத் தமிழில் எழுதி மகிழுந்து, ஒரு நாள் என் பிள்ளையும் இதைப்படிக்கும் என்று, ஒரு சின்ன ஆசையை ஒளித்து வைத்திருக்கும் என் மனதிற்காக//
எனக் குறிப்பிட்டிருந்தது போல எனக்கும் இருக்கும் ஆசையை அவனால் நிறைவேற்றுவது சிரமமே. ஆனாலும் சரளமாய் பேச வருவதில் சந்தோஷப் பட்டுக் கொள்ள வேண்டியதுதான். [என் பதிவுகளை வாசிக்கச் சொல்லிக் கேட்டுக் கொள்கிறான்! அதில் ஒரு சின்ன திருப்தி :))!]

blogger templates 3 columns | Make Money Online